சென்னை;
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் சரத்குமார், சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘டியூட்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் தனது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘சூர்ய வம்சம்’ படம் குறித்த நினைவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ”சூர்ய வம்சம் படம் ரிலீசான சமயத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம். அப்போது ஒரு இயக்குனர் என்னிடம் வந்து ‘என்ன படம் எடுத்துள்ளீர்கள், இது எப்படி ஓடும்?’ என்று கேட்டு சென்றார்.
எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் சூழலில், இவர் இப்படி சொல்லிட்டாரே… என்று யோசித்தேன். சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.
என்னை பொறுத்தவரை இன்று வரை தியேட்டர்களில் அதிக ரசிகர்கள் பார்த்த படம் என்றால், அது சூர்ய வம்சம் படம் தான். அதை உறுதியாகவே சொல்வேன்”, என்றார்.