புதுடெல்லி:
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினரை வரும் புதன்கிழமை சந்திக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சந்திப்பில் புதுடெல்லியில் நடைபெறும் என தகவல்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வெற்றி சரித்திரமாக அமைந்துள்ளது.
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பிதழ் வந்துள்ளதாக தகவல்.
தற்போது மும்பையில் உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு அனைவரும் அவரவர் இல்லத்துக்கு திரும்புகின்றனர்.
பிசிசிஐ ரூ.51 கோடி பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதை அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் ஊழியர்கள் பிரித்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து: “ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை (2025) இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புத வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன், சிறந்த திறமை, நம்பிக்கை ஆகியவற்றால் வெற்றிக் கோப்பை வசமானது. இந்திய அணி, போட்டி முழுவதும் சிறப்பான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியது.
நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி எதிர்காலச் சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.