மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்தானது.
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
இதனிடையே இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை சேர்ந்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கான காரணம் என்னவெனில்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் பயிற்சியின்போது பந்து தாக்கி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு இரங்கல் செலுத்தும் விதமாகவே இப்படி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவும் மெல்போர்ன் மைதானத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.