கெய்ரோ:
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சம்ரத் ராணா அசத்தினார். அவர் 8 பேர் இடையிலான இறுதி சுற்றில் மொத்தம் 243.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரராக ராணா சாதனை படைத்தார்.
20 வயதான சம்ரத் ராணா அரியானாவைச் சேர்ந்தவர். சீனாவின் ஹூ காய் 243.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்திய வீரர் வருண் தோமர் 221.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திரம் மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். அவர் 139.5 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை இஷா சிங் 6-வது இடம் பெற்றார்.
அணிகள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங், சுருச்சி சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 6 தங்கம் உள்பட 12 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.