புலி உயிருடன் தான் இருக்கிறது என்பதை முடிவுகள் நிரூபித்துள்ளன – எம்பி ஷாம்பவி சவுத்ரி!!

பாட்னா:
பிஹார் மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள் என்றும் மாற்றத்தை அல்ல என்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) எம்பி ஷாம்பவி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பகல் 12.30 மணி நிலவரப்படி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 87 தொகுதிகளிலும், ஜேடியு 77 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆர்ஜேடி 33 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டில் மூன்று பங்கு வெற்றியுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்நிலையில், தேர்தல் முன்னணி நிலவரம் குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) எம்பி ஷாம்பவி சவுத்ரி, “பிஹார் மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள்; மாற்றத்தை அல்ல.

இதை நாங்கள் முன்பே கூறி இருந்தோம். மெகா கூட்டணியின் எதிர்மறை அரசியலை பிஹார் மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிராகரித்துவிட்டார்கள். இருந்தும் அந்த கூட்டணியில் எவ்வித சிந்தனை மாற்றமும் நிகழவில்லை.

மக்களின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருமளவில் இருப்பதால், அது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்பி அருண் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடி – முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் மீண்டும் அமைய இருக்கிறது.

குற்றங்கள் பெருகுவதையும், சட்டம் ஒழுங்கு மோசடைவதையும் மக்கள் விரும்பவில்லை. அவர்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

பிஹார் தேர்தல் நிலவரம் குறித்த பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி தீபக் பிரகாஷ், “இது பிஹார் மக்களின் வெற்றி.

இரட்டை இன்ஜின் அரசாங்கம் மீண்டும் அமையப் போகிறது என்பது தெளிவாகிறது. பிஹார் மக்களுக்கு வாழ்த்துகள். பிஹார் மக்கள் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரை நம்புகிறார்கள்.

பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கடுமையாக உழைத்துள்ளனர். இனி, வளர்ச்சியின் வேகம் மேலும் அதிகரிக்கும். புலி உயிருடன்தான் இருக்கிறது என்பதை முடிவுகள் நிரூபித்துள்ளன. இப்போது அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார்.” என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *