சென்னை:
திருட்டு வாக்களிக்க முடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிர்ப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் பல்வேறு விமர்சனங்கள் செய்தன. அதையெல்லாம் மீறி தேசிய ஜனநாயக கூட்டணி பிஹார் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
அதேபோல, வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளும் போது, இவர்களை எல்லாம் கண்டறிந்து நீக்கப்பட்டு உண்மையான நேர்மையான வாக்காளர்களைக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த பணியின்போது பிஎல்ஓ-க்கள் வீடுவீடாகச் சென்று படிவத்தை வழங்கிடவேண்டும். ஆனால், தமிழகத்தில் இப்பணி சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் பிஎல்ஓ-வாக நியமிக்கப்பட்டவர்கள் 4-ம் வகுப்புதான் படித்துள்ளனர்.
இதை நாங்கள் தெரிவித்தும் மாற்றாமல், வேண்டுமென்றே திட்டமிட்டு எஸ்ஐஆர் பணி முறையாக நடைபெறக்கூடாது என சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். திமுக அரசு வாய்மொழி உத்தரவாக இவ்வாறு சொல்லி இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இது கண்டிக்கத்தக்கது.
பிஎல்ஓ-க்களாக தகுதியானவர்களை நியமிக்காததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இனி மேலாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு முரண்பாடாக செயல்படுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை வாக்குரிமை உடையோர் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர் உள்ளனர். இதுகுறித்து நாங்கள் தொகுதிவாரியாக விவரங்களை கொடுத்தும் நீக்கவில்லை.
இதனை பயன்படுத்தி, திமுக தேர்தல் நேரத்தில் கள்ள வாக்களித்து வெற்றிபெற்று வருகிறது. திருட்டு வாக்களிக்க முடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை எதிர்க்கிறார்கள். சென்னை மாநகராட்சி தேர்தலில் திருட்டு வாக்களிக்க வந்தவரை பிடித்து கொடுத்ததற்காக 15 நாள் சிறையில் அடைத்தார்கள்.
அப்படிப்பட்ட நிலை, வரும் தேர்தலில் வரக்கூடாது என்பதற்காகத்தான் எஸ்ஐஆரை நாங்கள் ஆதரிக்கிறோம்.
எஸ்ஐஆர் பணியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. எஸ்ஐஆர் பணிக்கு ஒரு மாதகாலம் போதுமானது. முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுக-வுக்கு கைவந்த கலை.
ஆர்கே நகரில் மட்டும் 31 ஆயிரம் வாக்குகள் நாங்கள் நீதிமன்றம் சென்றதால் நீக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் இவ்வளவு என்றால் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம்.
இந்த கட்சி அந்தக் கட்சி என பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.