சென்னை;
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து நாடே புலம்பும்போது, அதை ஆதரித்து அதிமுக உச்சநீதிமன்றம் சென்றது வெட்கக்கேடானது என்று கொளத்தூரில் நேற்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
சென்னை, கொளத்தூர் தொகுதியில் நேற்று ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ தலைப்பில் பாக முகவர்கள், நிர்வாகிகள் கூட்டம் தமிழக முதல்வரும் கொளத்தூர் தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் எஸ்ஐஆர் பற்றிதான் பேசுகின்றனர்.
மக்கள் ஒவ்வொருவரும், “நாங்கள் இந்திய குடிமக்கள்தான்” என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவுக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய ஆட்சியாளர்கள் இத்தகைய சூழலை உருவாக்கியுள்ளனர்.
விசாரணை அமைப்புகளைப் போல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாகவே வாக்குத் திருட்டு பற்றி குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, தமிழகத்தில் உண்மையான வாக்காளர் ஒருவர்கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது. இதற்காகதான் திமுக நீதிமன்றம் சென்றுள்ளது. மக்கள் மன்றத்திலும் விளக்குகின்றோம்.
அனைத்து கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என நம் உணர்வுகளையெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறோம். வழக்கமாக தேர்தல் வெற்றிக்கான பொறுப்பை ஒப்படைப்பது போல், மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுத்தரும் பெரும் பொறுப்பையும் கூடுதலாக உங்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. நாம் வாக்காளராக சேர ஒரு படிவம் கொடுக்கிறார்கள். இன்றைக்கு தேதி 14. பத்து நாட்கள் முடிவடைந்து விட்டன. மீதி இருப்பது எத்தனை நாட்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த விண்ணப்பத்தை நாம் வாங்கிப் பார்க்கும் போது, நமக்குப் பெரிய குழப்பம் வருகிறது.
தமிழகம் இதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். கேரளாவில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து பேராட்டம் நடத்தி, சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுகொண்டிருந்தால் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல.
உதிரிக் கட்சியாகக்கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும். அதாவது தங்களுடைய கட்சியை டெல்லியில் கொண்டுசென்று அடமானம் வைத்துவிட்டு அந்த எஸ்ஐஆரை ஆதரிக்கின்றனர். எஸ்ஐஆரை எதிர்த்து எல்லா கட்சிகளும் உச்சநீதிமன்றம் செல்கிறோம்.
ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அதை ஆதரித்து உச்சநீதிமன்றம் செல்லும் வெட்கக்கேடு நடைபெறுகிறது. மக்களைச் சந்திக்க அவர்களுக்குத் தெம்பு இல்லை.
அதனால்தான் இந்தக் குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள். எனவே, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும்.
அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். கொளத்தூரில் வெற்றி என்பது, நிர்ணயிக்கப்பட்ட வெற்றிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.