வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு; ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை- யாரும் பதட்டம் அடைய வேண்டாம்!! அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

தஞ்சாவூா்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி பிள்ளையார் நத்தம் பகுதியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்து 1-வது பயனாளிக்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மருந்து பெட்டகங்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, தென்னங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தமிழகத்தில், கடைக்கோடி மனிதர்களுக்கும், மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது.

அதன்படி, ஒரு திட்டம் துவங்கிய பிறகு, அந்த திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா என ஆய்வு செய்வதில், நமது முதலமைச்சருக்கு நிகர் அவர்தான்.

இரண்டு கோடி பயனாளர்களை கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்றா நோய்களுக் கான மருந்துகள் தருவதில், தொற்றா நோய்களை தடுப்பதில் எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்த போது, இந்தியாவில், தமிழகம் தான் என கண்டறியப்பட்டு, யுனைடெட் நேஷன்ஸ் இன்டர் ஏஜென்சி டாஸ்க் போஸ்ட் என்ற விருது கிடைத்தது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியில் இரண்டு கோடியே 50-வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு பாதிப்பினால், 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டில் 65 பேர் உயிரிழந்தார்கள்.

இது தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால், உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., தான்.

கடந்த 11 மாதங்களில், வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த 9 பேருக்கும் இணை நோய் பாதிப்பு இருந்து, சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ளதாவர்கள் என தெரியவந்தது.

தி.மு.க., பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், ஒரு இலக்கு எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.

வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *