மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
ஐயப்ப பக்தர்கள் விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
1. சபரிமலை செல்பவர்கள் ஒரு மண்டல காலம் (41 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.
2. கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேட்டி-சட்டையை அணிய வேண்டும்.
3. கார்த்திகை முதல் நாள் பெற்றோரை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.
பிரம்மச்சரிய விரதம்
4. அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும். இதேபோல சூரியன் மறைந்த பிறகு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும், குளிப்பதற்கு சோப்பு உபயோகிக்க கூடாது.
5. இரவில் தூங்கும்போது தலையணை,மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இது மனோவலிமையை பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. அதுவும்தவிர மாதர்கள் யாவரையும் மாதாவாக காண வேண்டும். மாதவிலக்கான பெண்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.
சைவ உணவு
7. சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும். மது அருந்தக்கூடாது, பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.
8. திரிகரண சுத்தி (மனம், வாக்கு, செயல்) ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்போதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக ஐயப்பன் பாடல்களை முணுமுணுத்து கொண்டு இருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.
9. சண்டை, சச்சரவுகளில் கலந்துகொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாக பழக வேண்டும்.
சுவாமி சரணம்
10. காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம்பாவம், துவேஷம் முதலிய குணங்களை குறைப்பதற்கு உதல எப்போதும் ஐயப்பன் திருநாமத்தை உறுதுணையாக கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்போதும் நிறைந்து நிற்பது ஐயப்பனின் பேரொளி திருவுருவமே ஆகும்.
11. உரையாடும்போது சுவாமி சரணம் என்று சொல்லி தொடங்குவதும், முடிக்கும்போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளை தரும்.
12. ஒரு ஐயப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என்று வணங்க வேண்டும்.
சுவாமி விரதம்
13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை ஐயப்பன் என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளை கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.
14. குடை, காலணிகள், சூதாடுதல், சினிமாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
15. விரத காலங்களில் உணவின் அளவை குறைத்து, உடலையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் 15 நாட்களாவது ஒருவேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.
கன்னி பூஜை
16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும்போது ஐயப்பனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும். அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் இயன்றவரை அன்னதானம் செய்ய வேண்டும்.
18. நெருங்கிய ரத்த தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின், மாலையைக் கழற்றி விடவேண்டும்.
பூஜை-பஜனைகள்
19.பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்துகொள்ளக்கூடாது.
20. விரத காலங்களில் தலைமுடியை வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்யவோ கூடாது.
21. மாலை அணிந்த எந்த ஐயப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாக கூடாது.
22. பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.