சென்னை:
கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘மாஸ்க்’. விகர்ணன் அசோக் இயக்கியுள்ள இப்படம் நவ.21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று இதே பெயரில் படம் இயக்கி வரும் புதுகை மாரிஸா என்பவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “2017-ம் ஆண்டு இத்தலைப்பை தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் புதுப்பித்து வந்தேன். பிளாக் பாண்டி, சென்ட்ராயன், வடிவுக்கரசி, ஷகீலா ஆகியோர் நடிப்பில், ‘மாஸ்க்’ படத்தை ஹாரர் காமெடியாக உருவாக்கியுள்ளேன்.
வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படம் உருவாக்கப்படுவதாக தகவல் வந்ததும் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கத்திடம் முறையிட்டேன்.
டைட்டில் உங்களுடையதுதான், யாருக்கும் என்ஓசி தரவில்லை என்று உறுதி அளித்தார். தற்போது வெளியீட்டுத் தேதி குறிப்பிட்டு போஸ்டர் வந்த பிறகு அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் இல்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, இயக்குநர்கள் சங்கம் மூன்றிலும் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை. என் படம் முழுமையாக முடிந்து சென்சாருக்கு தயாராகிவிட்ட நிலையில் எனக்கு நியாயம் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.