மதுரை:
‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், ஒன்றிய செயலாளர் கோட்டைகாளை, பகுதி கழக செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர் .அவனியாபுரம் பகுதி செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதில் ராஜன் செல்லப்பா பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சாலை, சுகாதாரம், அரசு அலுவலக கட்டிடங்கள், குடிநீர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை மதுரைக்கு வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் 304 கோடி அளவில் வைகை வடகரை சாலை போடப்பட்டது. ரூ.1000 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோல வைகை வடகரைக்கும் தென்கரைக்கு பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் அதிமுக ஆட்சியில் வடகரை பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது தென்கரை பகுதிகளில் இன்னும் முழுமை அடையவில்லை. தொடர்ந்து சட்டமன்றத்தில் எடுத்துக் கூறியும் பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு உள்ள செலவை மாநகராட்சி மூலம் செலவு செய்ய வேண்டும் என்று நான் மேயராக இருக்கும் போது தீர்மானம் போட்டு அதன்படி செயல்படுத்தப்பட்டது .
ஆனால், இந்த நான்கரை ஆண்டு காலம் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எந்தத் திட்டமும் செய்யவில்லை. பி.டிஆர். தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த பொழுது வெத்தலைப் பேட்டையில் இருந்து அவனியாபுரம் வரை உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். அதே போல் விரகனூர் ரவுண்டான அருகே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறினார். ஐந்து வருடம் ஆகப் போகிறது திட்டம் கிடப்பில்தான் உள்ளது.
அதேபோல மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொன்னார்கள். இதுவரை திட்ட வரைபடத்தை கூட செயல்படுத்தப்படவில்லை. விமான நிலைய விரிவாக்க பணிக்காக அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதி பெற்று திட்டங்கள் தொடங்கப்பட்டது .ஆனால் இந்த திட்டம் விரைவு படுத்தப்படவில்லை. இன்றைக்கு திமுக ஆட்சி நிர்வாகதிறன் இல்லாத ஆட்சியாக உள்ளது .பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.” என்றார்.