சென்னை:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது.
இதில் அந்த டீசரில் கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட காளை ஒன்றில் நடிகர் மகேஷ் பாபு அமர்ந்து வருவதை போன்று அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இந்த காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த டீசர் மற்றும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானதுமே, பலரும் கமல்ஹாசன் இயக்கி, நடித்து பாதியில் கைவிட்ட ‘மருதநாயகம்’ படம் குறித்து நினைவுகூரத் தொடங்கிவிட்டனர். கமல்ஹாசனின் கனவுத் படமான ‘மருதநாயகம்’ 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் கடும் நிதிப் பற்றாக்குறை, தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்த படத்தின் சிறிய டீசர் ஒன்று அப்போது வெளியானது. அதில் ஒரு காளை மாட்டின் மீது ஓடிவந்து ஏறும் கமல், அதில் கயிறு எதுவும் இன்றி காட்டுக்குள் வேகமாக ஓட்டிச் செல்வார்.
கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பெரியளவில் இல்லாத அந்த காலத்தில் உண்மையான காளை மாட்டை பயன்படுத்தி, பல மாதங்கள் பயிற்சி எடுத்து இந்த காட்சியை எடுத்ததாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ‘வாரணாசி’ அறிமுக டீசரில் மகேஷ்பாபு கிராபிக்ஸ் மாட்டில் அமர்ந்து வரும் காட்சியுடன் ஒப்பிட்டு பலரும் கமல்ஹாசனின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்திய சினிமாவில் தயாரிக்கப்பட்ட மிக அதிக பொருட்செலவிலான திரைப்படங்களில் ’மருதநாயகம்’ படமும் ஒன்றாக அப்போது கருதப்பட்டது.
இப்படத்தின் பட்ஜெட் தோராயமாக ரூ.80 கோடி. இளையராஜா இசையமைக்க, சுஜாதா கதை எழுத நாசர், விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருந்தனர். 1997-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்டார்.
கிராபிக்ஸ் அல்லது வேறு ஒரு நடிகரை வைத்து இப்படத்தை மீண்டும் உருவாக்க கமல் திட்டமிட்டு வருவதாகக் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.