புதுடெல்லி,
டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் உன் நபி என்பதும், இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த டெல்லி தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இதில், பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லி தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, டிரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்தி பேரழிவை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி, ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை போன்று, டிரோன்களை பயன்படுத்தி பாதிப்புகளையும் மற்றும் பேரழிவையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
உமர் உன் நபியுடன் ஒன்றாக செயல்பட்ட 2-வது நபரான ஜசிர் பிலால் வானி என்ற டேனிஷ் என்பவரை ஸ்ரீநகரில் வைத்து என்.ஐ.ஏ. நேற்று கைது செய்தது. அவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இவரும், டெல்லியில் கைது செய்யப்பட்ட ரஷீத் அலியை போன்று ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர். இதுபற்றி என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில்,
டிரோன்களை உருவாக்கியும், ராக்கெட்டுகளை தயாரிக்க முயன்றும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு டேனிஷ், தொழில்நுட்ப ரீதியாக உதவியாக செயல்பட்டு உள்ளார்.
டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு முன்னர் இதனை நடத்த திட்டமிட்டு உள்ளது என அந்த் அறிக்கை தெரிவிக்கின்றது. பெரிய பேட்டரிகள் கொண்டு, கேமராக்களுடன் கூடிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் வகையில் அவை உருவாக்கப்படும். சிறிய ரக டிரோன்களை செய்வதில் டேனிஷ் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். அதிகம் பேர் பலியாகும் வகையில், கூட்ட நெருக்கடியான இடத்தில் டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. போரால் உருக்குலைந்த சிரியா மற்றும் ஹமாஸ் குழுக்கள் பயன்படுத்திய இந்த தந்திர செயல்பாடுகளை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்ட நிலையில், டெல்லியில் அந்த கார் நெருக்கடியான பகுதிக்கு செல்வதற்கு முன்பே வெடித்து விட்டதா? அல்லது வெடிக்க செய்யப்பட்டதா? என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர், அரியானா, உத்தர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் டாக்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.