கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொற்கை துறையூரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி சித்ரா(59). இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வரும் சித்ரா, கும்பகோணத்தில் உள்ள 2 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வருகிறார்.
சில நாட்களாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சித்ரா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த பலவகையான 84 மாத்திரைகளை உட்கொண்ட சித்ரா, அங்கன்வாடி மையத்தில் மயங்கி விழுந்தார்.
சக பணியாளர்கள் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக சித்ரா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதில், பணிச்சுமையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஆணையர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வழங்கப்பட்ட அனைத்து படிவங்களையும் பதிவேற்றம் செய்துவிட வேண்டும் என்று மிரட்டியதாகவும், தனது இந்த முடிவுக்கு நிர்வாகமே காரணம் என்றும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எஸ்ஐஆர் அதிகாரிகளை கண்டித்து, அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர் ஜெய்தூம்பீ கூறியதாவது: எஸ்ஐஆர் தொடர்பாக அனைத்து அதிகாரிகளும் எங்களை மிகவும் தரக்குறைவாக, ஒருமையில் பேசி, பணி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதைக் கண்டித்து பணிகளைபுறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சித்ராவை தரக்குறைவாக பேசிய ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக நகராட்சி ஆணையர் காந்திராஜிடம் கேட்டபோது, “பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்
எஸ்ஐஆர் விண்ணப்பங்களை குறைவாக வழங்கி வந்தனர். அதை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினேன். தேவைப்பட்டால் கூடுதலாக பணியாளரை நியமிக்கிறோம் என்று கூறினேன். ஆனால் சுற்றி உள்ளவர்களின் தூண்டுதல் காரணமாக இதுபோல செய்துள்ளார்” என்றார்.