புதுடெல்லி:
டெல்லி குண்டுவெடிப்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
காஷ்மீரின் அனந்நாக் பகுதியை சேர்ந்த ஜசீர் முகமது பிலால் வானியும், காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபியும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் இருவரும் இணைந்து உள்ளனர்.
டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பிலால் வானியே முதலில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் பின்வாங்கி உள்ளார்.தனக்கு குடும்பம் மிகவும் முக்கியம்.
தற்கொலைப் படை தீவிரவாதியாக உயிரிழப்பது மதநெறிகளுக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே மருத்துவர் உமர் நபி தற்கொலைப் படை தீவிரவாதியாக மாறி டெல்லியில் கார் குண்டு தாக்குதலை நடத்தி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு அல் -பலா மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது முதல் யாரெல்லாம் கல்லூரியில் பணியாற்றினார்கள். அவர்களின் வருகைப் பதிவேடு, அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது என்பன குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த கல்லூரியை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பிலால் வானி நேற்று டெல்லி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா, தீவிரவாதி பிலால் வானியை 10 நாட்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.