கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: விவரம்…..

கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 3-ந்தேதி (3.12.2025) நடக்கிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

காலை 5 மணிக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நடக்கிறது. 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம்,மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் உச்சிகால தீபாராதனை நடக்கிறது.பின்னர் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதன் பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ப. ஆனந்தன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ச.ஆனந்த் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *