பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!!

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கிய நிலையில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 3 ஆம் நாள் நிகழ்வாக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டாகினார்.

4ஆம் நாள் நிகழ்வாக கள்ளழகரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதை தொடர்ந்து, கள்ளழகர் கடந்த 5ஆம் நாள் நிகழ்வாக தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார்.

பின்னர், நேற்று முன்தினம் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த பின், நேற்றிரவு முதல் காலை வரை ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.

இதனையடுத்து 7ஆவது நாள் நிகழ்வாக அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் மதிச்சியம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

இதனையடுத்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னா் இரவு தல்லாகுளம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் திருமஞ்சணம் நடைபெற்ற பின்னர் கள்ளழகருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவதானியம், வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை கொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், ரோஸ், துளசி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களை கொண்ட பூப்பல்லாக்கில் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் முன் எழுந்தருளினார், கருப்பண்ணசாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது, பின்னர் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர் மலையினை நோக்கி புறப்பட்டார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். இன்று காலையில் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு சென்றடைகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *