எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து……. தவெக வரை… செங்கோட்டையனின் அரசியல் பயணம்!!

சென்னை,
எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் இருக்கும் செங்கோட்டையன், தனது முதல் தேர்தலை 1977-ம் ஆண்டு சந்தித்தார்.

அப்போது அவர் சத்தியமங்கலம் தொகுதியில் களம் இறங்கினார். இதுவரை 10 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இருக்கும் அவர் 1996-ம் ஆண்டு தவிர மற்ற 9 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.

அதில் 8 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தான் களம் கண்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஒரே தொகுதியில் இவ்வளவு முறை போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கும் தலைவர் செங்கோட்டையன்தான்.

கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு முதலில் வேளாண்மை துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்தார்.

அந்த சமயத்தில் அவர் மீது புகார் எழுந்ததால் அவரை அமைச்சரவையில் இருந்து 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா நீக்கினார். இருந்தாலும் அவருக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.

இந்த முறையும் அவர் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா அமைச்சர் பதவி தரவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனுக்கு 2017-ம் ஆண்டு கல்வி அமைச்சர் பதவி வழங்கினார்.

பின்னர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

செங்கோட்டையன், அ.தி.மு.க.வின் மிக மூத்த தலைவர் என்பதால் அவருக்கு என்று கட்சியில் தனிமரியாதை உண்டு. யாரையும் அதிர்ந்து பேசாமல், எதையும் இன்முகத்துடன் செய்யும் செங்கோட்டையனை எதிர்க்கட்சியினரும் மதிப்பார்கள்.

அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆரம்பத்தில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் ஒற்றை தலைமை என்ற எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி செல்லும் போது அதில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். அதனை செங்கோட்டையன் முழு அளவில் ரசிக்கவில்லை.

இது தான் பிரச்சினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இது ஏற்கனவே எரிந்து கொண்டு இருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது. ஒரு கட்டத்தில், அவரது தொகுதியில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். ஆனால் ஜெயலலிதா படம் வைக்கவில்லை என்று கூறி இந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

அதற்கு அ.தி.மு.க. சார்பில் இது விவசாயிகள் நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி அல்ல என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால் செங்கோட்டையன் அதனை ஏற்று கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக நடந்த சட்டசபை கூட்டங்களில் பங்கேற்ற செங்கோட்டையன், சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அறைக்கு செல்லவில்லை.

அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அதனால் அவருக்கும், கட்சிக்கும் இடைவெளி பெரிய அளவில் விழுந்தது.

இந்த சூழ்நிலையில் செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் சில பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசினார்.

ஆனால் என்ன பேசினார்? எதற்கு அவர் சந்தித்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை. அவர் பா.ஜனதாவில் இணைய போகிறார் என தகவல் பரவியது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஒரு போதும் சேர்க்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி விட்டார். இருப்பினும் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பலன் இல்லை. எனவே செங்கோட்டையனிடம் இருந்த மாவட்ட செயலாளர் மற்றும் மாநில பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.

இவ்வாறு அ.தி.மு.க.வில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், பா.ஜனதா வழியாக சென்று த.வெ.க.விற்கு சென்று இருக்கிறது. செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளது.

மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா பிரசாரத்துக்கு பயணத் திட்டம் வகுத்து கொடுத்ததில் வல்லவர்:-

செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுத்து கொடுக்கும் பணியை தலைமை தாங்கி செய்து வந்தார். அவர் ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு சில நாட்களுக்கு முன்பே சென்று எந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும். ஜெயலலிதா எந்த ஓட்டலில் தங்க வேண்டும்.

ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊருக்கு செல்வது எப்படி? போன்ற பணிகளை திட்டமிட்டு செய்து வந்தார்.

எனவே அவருக்கு புவியியல் ரீதியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் அத்துப்படி. த.வெ.க.வில் இணைய இருப்பதால், விஜய்யின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை மேற்கொள்வார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *