புதுடெல்லி:
வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு என அரசமைப்பு தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைவு, இந்திய அரசியல் நிர்ணய சபையால் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, அரசியலமைப்பு தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “அரசியலமைப்பு தினத்தில் அரசியலமைப்பை வடிவமைத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.
வர்களின் தொலைநோக்குப் பார்வை, வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது முயற்சியை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டம், கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
இது நமக்கு உரிமையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குடிமக்களாக நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. இவற்றை நிறைவேற்ற நாம் முயற்சிக்க வேண்டும். இந்தக் கடமைகள் ஒரு வலுவான ஜனநாயகத்துக்கு அடித்தளமாகும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்பின் சக்திதான், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்திலிருந்து வந்த என்னைப் போன்ற ஒருவர், 24 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து அரசியல் சாசன பதவியில் இருந்து பணியாற்ற உதவுகிறது. நமது அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கி உள்ளது.
எனவே, வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. மேலும் 18 வயது முடிவடைந்த, முதல் முறை வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தில் சிறப்பு விழாக்களை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன் உரை: டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “பாபா சாஹிப் பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத், என்.கோபால சுவாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ண சுவாமி ஐயர், துர்கா பாய் தேஷ்முக் உள்ளிட்டோர் அரசியல் சாசனத்தை உருவாக்கினர்.
இது ஒவ்வொரு பக்கமும் தேசத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்கும் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான வளர்ந்த இந்தியாவுக்காக கூட்டாக உழைப்பதற்கும் உறுதி அளிப்பது தான் அரசியலமைப்புக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய மரியாதை” என்றார்.