தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!! லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகிறார்…..

புதுடெல்லி:
தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். எதிர்வரும் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

31 வயதான வினேஷ் போகத், கடந்த 2024-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் இழந்தார். இதையடுத்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் கடந்த ஆண்டு அறிவித்தார்.

“பாரிஸ் போட்டிதான் கடைசியா என்னிடம் பலர் கேட்பது உண்டு. அதற்கு நீண்ட நாட்களாகவே என்னிடம் பதில் இல்லை.

அழுத்தம், எதிர்பார்ப்பு, என் லட்சியம் என எல்லாவற்றில் இருந்தும் விடைபெற விரும்பினேன். இந்த பயணத்தில் எனது அர்ப்பணிப்பு, ஈடுபாடு, சவால்கள் உள்ளிட்டவற்றை அளவிட நேரம் எடுத்துக் கொண்டேன்.

இதில் எனக்கு கிடைத்த பிரதிபலிப்பில் உண்மையை அறிந்தேன். அது என்னவென்றால் நான் மீண்டும் களமாட விரும்புகிறேன். இதனால் எனது ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறேன்.

இதோ லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கை நோக்கி அஞ்சாத நெஞ்சோடு அடியெடுத்து வைக்கிறேன். இந்த பயணத்தில் எனது மகனும் சியர் லீடராக இணைகிறார்” என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக வினேஷ் போகத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *