தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லை எனவும், அவர்களுக்கு ஆன்மீகவாதிகளும், துறவிகளும் போதிக்க வேண்டும் – அண்ணாமலை கருத்து!!

திருப்பூர் ;
தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லை எனவும், அவர்களுக்கு ஆன்மீகவாதிகளும், துறவிகளும் போதிக்க வேண்டும் எனவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள அன்பு இல்லத்தில் சுவாமி ஸ்ரீ பூரண சேவானந்த மகராஜ் மணிமண்டபம் திறப்பு விழா மற்றும் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிலைக்கு மலர் தூவி வணங்கிய பின் அவர் கூறியதாவது: இந்து மதத்தினர் அதிக அளவில் விவாகரத்து செய்கின்றனர்.

அதுவும் கொங்கு பகுதிகளில், அதிக அளவு விவாகரத்து நடக்கிறது. தற்போதுள்ள ஜென்சி மற்றும் ஜென் ஆல்ஃபா போன்ற தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது.

அவர்களுக்கு ஆன்மீகவாதிகளும், துறவிகளும் போதிக்க வேண்டும். இந்து மதம் ஒரு வாழ்வியல் நெறியில் இருக்கக்கூடியது. நமக்கு பிற மதங்கள் போட்டியும் இல்லை, எதிரியும் இல்லை.

மத கோட்பாட்டுக்குள் அடங்காத வாழ்வியல் நெறிமுறையை பிற மதங்களுடன் ஒப்பிடுவது ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என ஒப்பிடுவதுபோல் ஆகும்.

எல்லா மதங்களுக்கும் தாய் மதமாக இந்து மத வாழ்வியல் நெறிமுறைகள் இருந்துள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் உலக அளவில் மதங்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதில் சனாதனத்தின் பங்கு என்ன?

உலக அமைதிக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசிக்க வேண்டும். 2055-ல் உலகில் அதிகமானோர் பின்பற்றக்கூடிய மதமாக இஸ்லாமியமும், 2-வதாக கிறிஸ்தவமும் இருக்கும்.

அடுத்த இடத்தில் இந்து மதம் இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதை யாரும் தடுக்க முடியாது.

நாம் அதற்காக சண்டையிடாமல், சனாதன தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை இஸ்லாமியம் மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட பிறமதங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், என்றார். விழாவில் ஆன்மீகத் துறவிகள், அன்பு இல்ல நிர்வாகிகள், பாஜகவினர் பலர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *