சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு!!

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்தது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலமாகும்.

மூலவர் வேங்கடகிருஷ்ணன் சாமி நிற்க, ஒரு புறம் ருக்மணி தாயார், மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் பிருத்யும்னனும், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணிக்கு பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்குகிறது.

பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.

இதையடுத்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடக்கிறது.

இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடக்கிறது. 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *