சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க, கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக!!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க, கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, மாநாடு என பல்வேறு முன்னெடுப்புகளை திமுக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கனிமொழி எம்.பி., தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இக்குழுவில் செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்எல்ஏ எழிலன், சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம், மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் தமழரசி, ‘கனவு தமிழ்நாடு’ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து திமுக-வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் 2 பெண்கள் உள்ளனர்.

அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலுக்கும் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணியானது 40/40 வெற்றி பெற்றது.

தற்போது மீண்டும் அவரது தலைமையிலேயே குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *