திண்டுக்கல் ;
அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ்பாபு. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி என்பவர் 40 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்பாபுவிடம் கேட்டுள்ளார்.
முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் வாங்கிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு அங்கித் திவாரி மிரட்டியதால், சுரேஷ்பாபு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் அங்கித்க் திவாரியை கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து தற்போது மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.
இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையும், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து அவர் மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த 20ம் தேதி விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்திருப்பதால், அங்கேயே நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதனிடையே இன்று அங்கித் திவாரி தாக்கல் செய்திருந்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது எனவும், தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.