ஸ்ரீஹரிகோட்டா:
முன் எப்போதும் இல்லாத அதிக எடை கொண்ட அமெரிக்க செயற்கைக்கோள் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்திய விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இது, எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தரமான முறையில் வழங்குவதற்கானது.
இந்த செயற்கைக்கோள் இன்று காலை 8.55 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோ இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது. புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மிகப் பெரிய வணிகத் தொடர்பு செய்கைக்கோள் இது.
இரண்டாவதாக, இந்திய மண்ணில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோட் இதுவாகும்.