இப்ராகிம் ரைசி மரணம்: ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி !! வெளியான அறிவிப்பு….

தெஹ்ரான்,
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது.

இப்ராகிம் ரைசி மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது முக்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளை செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், ஈரானின் அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரசாரம் ஜூன் 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *