கோவை
தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெண்கள், அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் . ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம்.
தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது. சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது. ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
ரெயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனிக்க வேண்டும்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தமிழை கொண்டாடுவது பா.ஜ.க ஆனால் தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு .
ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் தி.மு.க. சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளது.
இது ளிப்படையான பாரபட்சம் . இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” என்று சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கி என அழைப்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.