‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இவர் மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், ஒரு வருடம் நடிக்காமல் இருந்தார். சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தற்போது, புதிய இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்ததாக சமந்தா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் நான் ‘சிட்டாடல்’ வெப் தொடர் மற்றும் ‘குஷி’ படத்தில் பிஸியாக நடித்தேன். குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது.
அதில் மிக அதிகமான ஆக்சன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு நான் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதால் அந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி ஆனேன் என்றார்.