63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் – குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் போட்டியில் சூப்பராக வென்ற குஷியில் சென்னை அணி தெம்பாக குஜராத்தைச் சந்தித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் வழக்கம் போல அபாரமான தொடக்கத்தை சென்னைக்குக் கொடுத்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதங்களை நெருங்கிய நிலையில் முதலில் ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிருந்தார். 3 சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகளை அவர் விளாசியிருந்தார். அடுத்து கேப்டன் ருத்துராஜ் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு சிக்சர் மற்றும் ஐந்து பௌண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த அஜிங்கியா ரஹானே 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், சிவம் துபே ரூபத்தில் அதிரடி வான வேடிக்கை தொடங்கியது. வந்த பந்தையெல்லாம் வெளுத்து வாங்கினார் சிவம் துபே. சரமாரியாக அவர் ஆடிய விதத்தால் சேப்பாக்கம் ஸ்டேடியமே தாறுமாறாக துள்ளிக் குதித்தது. வெறும் 23 பந்துகளை மட்டுமே சந்தித்த சிவம் துபே 51 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 221 ஆக இருந்தது ரசிகர்களை துள்ள வைத்தது.

அதன் பின்னர் வந்த டேரில் மிட்சல் 20 பந்துகளில் 24 ரன்களை சேர்த்து கொடுத்தார். கடைசியாக களம் இறங்கிய சமீர் ரிஸ்வி ஆறு பந்துகளில் 14 ரன்கள் விரட்ட, ரவீந்திர ஜடேஜா மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

குஜராத் தரப்பில் ரஷீத் கான் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

207 ரன்கள் என்ற சேசிங்கில் இறங்கிய குஜராத் அணிக்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமையவில்லை. விருத்திமான் சாஹா 21, சாய் சுதர்ஷன் 37, டேவிட் மில்லர் 21 என்று சேர்த்துக் கொடுத்தனர். விஜய் சங்கர் அதிரடியாக ஆட முயன்றார். ஆனால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரின் கடைசி பந்துகளில் உமேஷ் யாதவ் ஆறுதலுக்காக சில சூப்பர் ஷாட்டுகளை அடித்தார். ஆனால் வெற்றிதான் கனவாகி விட்டது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *