“மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருக்கிறது” – பாமக நிறுவனர் ராமதாஸ்!!

சென்னை:
“மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருக்கிறது” என்று சொல்லி இருப்பதன் மூலம், தான் திமுக அணிக்கு செல்லவிருப்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2006 சட்டப் பேரவைத் தேர்தலில், ‘ஆட்சியில் பங்கு வேண்டாம்’ எனக்கூறி, ஐந்தாண்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவை திமுக தலைவர் கருணாநிதிக்கு பாமக கொடுத்தது.

அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெற்றிருந்தது. அப்போதும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது காங்கிரஸாரின் விருப்பமாகும். எனக்கு விருப்பம் இல்லாததால், நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினேன்.

இப்போது யாருடன் கூட்டணி என்பது இதுவரையிலும் முடிவாகவில்லை. பாமக-வின் முகமாக நான் இருக்கும்போது, அன்புமணியை எதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அழைத்தார் எனத் தெரியவில்லை. மு.க.ஸ்டாலினின் ஆட்சி நன்றாக இருக்கிறது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க, மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோல் 20 கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மாம்பழம் சின்னத்தை பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவோம்.

கூட்டணி தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும். தவெக-வுடன் கூட்டணி என்ற யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

சட்டப் பேரவைத் தேர்தலில் செயல் தலைவர் காந்தி போட்டியிடுவார். விசிக தலைவர் திருமாவளவன் இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா? எனக் கேட்கிறீர்கள்.

அரசியலில் எதுவும் நடக்கும். எதிர்பாராத விதமாகவும் நடக்கும். அரசியலில் எதுவும் நடக்காது என எதையும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *