மத்திய அரசை கண்டித்து நாளை எல்.டி.எஃப் போராட்டம்!!

திருவனந்தபுரம்
மத்திய அரசின் “மக்கள் விரோத” கொள்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ‘சத்தியாகிரகப்’ போராட்டத்தை நாளைமுதல் (ஜன.12) நடத்தவுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-


மத்திய அரசு பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாளை (12-ந் தேதி) திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற உள்ளது.

சமுதாயத்தில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் பா.ஜ.க. செய்யும் முயற்சிகளுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் நினைவு நாளான வருகிற 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.

மேலும், மாநில அரசு மேற்கொண்டு வரும் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன.

வடக்கு மண்டல அணிவகுப்பு காசர்கோடு முதல் பாலக்காடு வரையிலும், மத்திய மண்டல அணிவகுப்பு பத்தனம்திட்டா முதல் எர்ணாகுளம் வரையிலும் நடைபெறும். தெற்கு மண்டல அணிவகுப்பு திருச்சூர் முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும்.” என்று அவர் கூறினார்.

மேலும் சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு தொடர்பாக பேசிய அவர், இந்த வழக்கில் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம் என்றும், கோயிலில் இருந்து திருடப் பட்ட தங்கம் மீட்கப்படும் என்றும் சிபிஐ(எம்) ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *