அடிலெய்டு:
அடிலெய்டு டெஸ்டில் முகமது சிராஜ் வீசிய புல்டாஸ் பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் போல்டானார். அதனை மிகவும் ஆக்ரோஷமாக சிராஜ் கொண்டாடினார்.
முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார்.
முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக கூறியதாக டிராவிஸ் ஹெட்டும், டிராவிஸ் ஹெட் பொய் கூறுவதாக முகமது சிராஜும் தெரிவித்தனர்.
டிராவிஸ் ஹெட்-முகமது சிராஜ் இடையேயான இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலியா கேப்டன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா கூறியதாவது:-
ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும், அதிகப்படியாக ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும் இடையே மிக மெல்லிய கோடு இருக்கிறது. அணியின் கேப்டனாக யாரும் அந்த கோட்டை கடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எனது வேலை. ஆனால், வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளலாம்.
அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது முகமது சிராஜுக்கு நன்றாக தெரியும். அணிக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அவர் செய்வார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும்போது இது போன்ற விஷயங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கம்மின்ஸ் கூறியதாவது:- டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன். அவர் மிகுந்த முதிர்ச்சியுடையவர். அவர் தொடர்புடைய விஷயங்களை அவரே பேசுவார். வீரர்கள் அவர்களாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
அணியின் கேப்டனாக என்னுடைய தலையீடு தேவைப்பட்டால், நான் கண்டிப்பாக தலையிடுவேன். ஆனால், நான் தலையிடுவதற்கான தேவை இருந்ததாக ஒருபோதும் உணரவில்லை என்றார்.