சென்னை:
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
100 நாள் வேலைத் திட்ட பெயரை மாற்றுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடரவும் தமிழ்நாடு அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பேசியதாவது: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு விபி ஜி ராம் ஜி என பெயரிப்பட்டுள்ளதை எதிர்க்கிறோம். தமிழகத்தில் பாகுபாடின்றி மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திலும் ரூ.3112 கோடி நிதி விடுவிக்கவில்லை.
இப்படி இவர்கள் நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தினால் ஏழை எளிய கிராமப்புற மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே ஒன்றிய அரசு கொள்கையாக கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் பெரும்பான்மையாக பயனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த புதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்படுகையில், மாநில அரசின் நிதிச்சுமை கணிசமாக அதிகரிக்கிறது.
இதனை திருத்தி அமைக்க வேண்டும். நமது மாநிலத்தின் மீது ஏன் இவ்வளவு ஓரவஞ்சனை.
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் விபி ஜி ராம் ஜி திட்டத்தை அறிமுக நிலையிலேயே எதிர்த்தனர். ஆனால் மக்களின் குரலை மதிக்காக ஒன்றிய அரசு, இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பேச வேண்டும். இது குறித்து அவர் பேசுவார் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.