இந்தூர்:
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், அசுத்தமான குடிநீரால் 23 பேர் உயிரிழந்தும், பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டும் சில வாரங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் அசுத்தமான நீரைக் குடித்ததால் 22 பேர் நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்தூரின் மஹோவ் பகுதியில் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஹோவ் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் சிலர் அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புகார்கள் வெளிவரத் தொடங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு இதற்கான நடவடிக்கையில் இறங்கியது.
மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா நோயாளிகளைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்று, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
மேலும், பல்வேறு சுகாதாரக் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்ட சுற்றுப்புறங்களில் உள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் இந்தூரில் அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்பட்டு சுமார் 25 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இறப்பு எண்ணிக்கை 15 என அரசு தரப்பு தெரிவித்தது.
குடிநீர் மாசுபாட்டிற்கான காரணங்களை விசாரிக்கவும், இது மீண்டும் நிகழாமல் தடுக்க பரிந்துரைகளை வழங்கவும் அரசாங்கம் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இந்த விவகாரம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 21 பேரின் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.