புதுடெல்லி:
நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் கூறியதாவது:
உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், நமது நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது.
ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்தது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும். தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும்.
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். முதலில் நாடு என்ற உணர்வுடன் நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி, இந்தியாவை மேலும் சிறப்படையச் செய்ய வேண்டும். தேசபக்தி உணர்வை வலுப்படுத்த குடியரசு தினம் ஒரு வாய்ப்பு.
உலக வரலாற்றில் மிகப் பெரிய குடியரசின் அடிப்படை ஆவணமாக இந்திய அரசியல் சாசனம் உள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர் சக்தி முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.