மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கொடைக்கானலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை ரோகிணி பேசியதாவது:
தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் அடக்குமுறையை எதிர்ப்பதற்காகத்தான் இத்தேர்தல் நடைபெறுகிறது.
10 ஆண்டுகளில் செயல்படுத்தாத திட்டங்களை மோடி இனி எப்படி செய்வார்? அனைத்தையும் செய்து விட்டதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். மோடி அரசு பழங்குடியின பெண்ணுக்கு ஜனாதிபதி பதவி வழங்கியுள்ளோம் என கூறுகிறார்கள்.
ஆனால், அவரை கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பது ஏன்? அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரும், ஜனாதிபதியும் நேரில் சென்றனர். அப்போது வயது மூப்பின் காரணமாக அத்வானி மற்றும் மோடி அமர்ந்துள்ளனர். ஆனால், நாட்டின் ஜனாதிபதி நின்று கொண்டு உள்ளார். இதில் சமத்துவம் எங்கே உள்ளது?
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னைக்காக வாய் திறக்காதவர் தான் மோடி. மோடியின் கேரண்டியை நம்பக் கூடாது. நம்பவும் மாட்டோம். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத தால்தான் மோடி 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை.
அப்படி எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை கைது செய்வதும், அந்நிறுவனங்களை முடக்குவதும் தான் மோடி ஆட்சியின் அடக்குமுறை. கருத்து உரிமையின் குரல்வளையை நெரிக்கும் அரசு தான் மோடி அரசு. பாஜ அரசு இந்துக்களை ஒன்றாக பார்ப்பதில்லை.
சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறது. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து நாட்டை அடிமைப்படுத்த முயல்கிறது. இந்த அராஜக ஒன்றிய அரசு நீடிக்க வேண்டாம். இதற்கு இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் இவ்வாறு பேசினார்.