வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!!

சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அ.தி.மு.க.வையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

அந்த ஆதரவின் உதவியுடன் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *