புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், மக்கள் தலைவர் கிடையாது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாடல்!!

கோவை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் முதல்வரும் அண்ணா திமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் முன்னாள் அமைச்சரும் அண்ணா திமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தொண்டா முத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேரூர், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர் ஒன்றிய நிர்வாகிகளுடன் தென்னமநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், கரும்புக்கடை பகுதிகளின் நிர்வாகிகளுடன் செல்வபுரம் தனியார் மண்டபத்திலும், குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதிகளின் நிர்வாகிகளுடன் கோவை குளத்துபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணி, தேர்தல் பணிகளை களத்தில் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். குளத்துபாளையம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கடந்த மூன்று மாதங்களாக எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட நிர்வாகிகளை பாராட்டி கௌரவித்தார். தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு நிர்வாகியும் முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் அதிக வாக்குகளைப் பெற வீடு வீடாகச் சென்று கட்சி பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்.

அண்ணா திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

திமுக அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும், மகளிர்க்கு வழங்கப்படும் உதவித்தொகை அரசின் சொந்த பணம் அல்ல என்றும் விமர்சித்தார்.

அண்ணா திமுக ஆட்சி அமைந்தால் மகளிர்க்கு ரூ.2,000 உதவித்தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து பேசிய அவர், தற்போது பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன என்றும், மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் உருவாவது இயல்பானது என்றும், அதில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், மக்கள் தலைவர் கிடையாது. தன் கூட்டத்தின் போது 41 பேர் மரணம் அடைந்தனர். ஆனால் அவர் அதனை பொருட்ப்படுத்தாமல் சென்று விட்டார்.

அண்ணா திமுக கட்சி அப்படிப்பட்டதல்ல. ஒருவருக்கு பிரச்சனை என்றால் அனைவரும் இணைந்து தீர்வு காண்பார்கள்.

கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்காமல் இருந்திருந்தால், தற்பொழுது விஜயின் நிலைமை மாறி இருக்கும். சினிமா வேறு, ரியல் வேறு, நட்பு வேறு, கட்சி வேறு என்பதை உணர்ந்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்.

மேலும், “வீட்டு வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற காரணங் களால் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை. தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைவது உறுதி,” என்றார்.

வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும் என்றும், குறிப்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக அண்ணா திமுக திகழ்கிறது என்றும், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதை நிர்வாகிகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பூத் கமிட்டி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *