நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜீவி பிரகாஷ் பேசும் போது, “வாராவாராம் உங்கள் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இவை நான்கு ஆண்டுகளாக உழைத்து உருவான படங்கள். இந்த படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து, இப்போது ரிலீசாகி வருகிறது.”
“டியர் திரைப்படம் ஐஸ்வர்யா விமான பயணத்தின் போது என்னைப்பார்த்து இந்த கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்தார்.
இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.