திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு கொண்டுவரப்படும் – அமைச்சர் கேஎன் நேரு உறுதி..!!!

புதுக்கோட்டை மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால் திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் கேஎன் நேரு உறுதியளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தற்காலிக அலுவலகம் திறப்பு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ மற்றும் அமைச்சர் கே என் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்காலிக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் நேரு மற்றும் துரை வைகோ ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கேஎன் நேரு, புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு நலத்திட்டங்கள் புதுக்கோட்டைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு கொண்டு வரப்படும்.

அதேபோன்று, குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு துரை வைகோ நமக்கு உதவி செய்வார், என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர் துரை வைகோ, நான் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவதற்கு தான் தேர்தலில் நின்று உள்ளேன்.

நான் வெற்றி பெற்றால் திருச்சியில் எம்பி அலுவலகம் தலைமை அலுவலகமாகவும், மீதமுள்ள புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், கந்தர்வகோட்டை உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் கிளை எம்பி அலுவலகம் திறக்கப்படும்.

பொது மக்களின் கோரிக்கைகள் குறைகள் பெறப்பட்டு உடனடியாக அதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை பகுதியில் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அதை நிறைவேற்றப்படும்.

குறிப்பாக, ஆறு மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் முடிவடைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் பேசி நடவடிக்கை எடுத்து நிதி பெறப்படும், என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *