கோவை,

இந்தியா ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 32-வது மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து தியான லிங்கத்தில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர், ஆதியோகி சிலை முன்பு இருந்த மகா சிவராத்திரி விழா மேடைக்கு வந்து அங்கிருந்த யோகேஸ்வர லிங்கத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டார். மகா சிவராத்திரி யாக வேள்வியை நெருப்பு மூட்டி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காசி உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்று என்றால், தமிழ்ப் பண்பாடோ உலகில் மிகப் பழைமையானது.
பாதுகாப்பு என்பது வெறும் வெளிசக்திகள் சார்ந்தது மட்டுமல்ல, அது வலிமைமிக்க தேசிய உணர்வில் இருந்து வருவது. அச்சம் இல்லாத சமுதாயத்தால்தான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும். இந்த அச்சமின்மை ஆன்மிக அடிப்படையில் இருந்துதான் வரும்.
சிவபெருமானைப் போலவே, நம்முடைய படை வீரர்களும் தங்களுக்குள் அச்சமற்ற தன்மையையும், பொறுமையையும் கொண்டு தேசத்தைக் காக்கிறார்கள்.
மனித குலம் மன அழுத்தத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளாகிற இந்த காலகட்டத்தில் சிவபெருமான் முக்கியத்துவம் பெறுகிறார். இரைச்சல்களுக்கு நடுவில் சமத்தன்மையோடு இருப்பதற்கான அடையாளமே சிவபெருமான். இந்த சாரத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் மனித குலத்திற்கு முன் கொண்டு வந்து, ஆன்மிகத்தை ஒரு விஞ்ஞானமாக முன்வைக்கிறார் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும்போது கூறியதாவது:
ஆதியோகி கடந்த காலத்தைச் சேர்ந்தவர் அல்லர். அவர் எதிர்காலத்தைச் சேர்ந்தவர். ஏனெனில் அவர் வழங்கியது வெறும் நம்பிக்கைகளோ, தத்துவங்களோ, கோட்பாடுகளோ அல்லது போதனைகளோ அல்ல. அவை மனித நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள். எனவே, ஆதியோகி வருங்கால தலைமுறைக்கு உரியவர் என்றார்.
ஈஷா மகாசிவராத்திரி விழாவில் இந்த ஆண்டு முதல், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘பவ்ய பாரத் பூஷண்’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என சத்குரு அறிவித்தார்.
அந்த வகையில் வயலின் கலைஞர் என்.ராஜம், பரதநாட்டியக் கலைஞர் அலர்மேல்வள்ளி, விண்வெளி விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண் குமார், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால், ஆபரேஷன் சிந்தூரில் பங்காற்றிய ராணுவ வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, கடற்படைத் தலைமை அதிகாரி ராகுல் விலாஸ், ராணுவ அதிகாரி ரத்தே உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஆதியோகி திருவுருவம் பதித்த விருது பதக்கங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இதில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், நடிகைகள் சாரா, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இரவு முழுவதும் இசை நிகழ்ச்சி: மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் தியானலிங்கம், லிங்க பைரவி வளாகங்கள் பொது மக்களின் தரிசனத்துக்குத் திறந்திருந்தன. மேலும், இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்துக்கு சத்குரு முதன்முறையாக மகா அபிஷேகம் என்னும் ஆன்மிக செயல்முறையை அர்ப்பணித்தார்.
இரவு முழுவதும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காத்வி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த் சோனாக்ரா, ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், ராப் இசைக் கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆஃப் ஈஷா குழுவுடன் இணைந்து பாடகர்கள் சுவாகத் ரத்தோட், பிருத்வி காந்தர்வ் ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர். இதனுடன் புராஜக்ட் சம்ஸ்கிருதி குழுவின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் தேவார பண்ணிசை மற்றும் களரிப் பயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முன்னதாக, சிவராத்திரி தினத்தையொட்டி இன்னர் என்ஜினீயரிங் ஆன்லைன் யோகப் பயிற்சி வகுப்பை சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிமுகப்படுத்தினார். பிப்ரவரி 15 முதல் 18 வரை 4 நாள்களில் இந்த வகுப்பில் இணைய லிங்க் மூலமாகப் பதிவு செய்வோருக்கு இந்த ஆன்லைன் வகுப்பு இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.