சென்னை:
‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு விஷால் பதிலளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ரஜினி, விஷால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாக்களித்துள்ளனர்.
விஷால் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவரிடம் ”‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷால், “ஒருவர் குரல் கொடுப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1519 பேரும் தணிக்கை அலுவலகத்தில் போய் நின்றால் என்ன நடக்கும். அது விரைவில் நடக்கும்.
அதற்காகவே தோற்பவர்களுடன் இணைந்து எப்போதும் பணிபுரியுங்கள் என்று சொல்வேன். அப்படிச் செய்தால் செழிப்பாக இருக்கலாம். ’ஜனநாயகன்’ வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டது, பின்பு நாங்கள் எப்படி அதில் தலையிட முடியும்.
ஒருவேளை கே.வி.என் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்திருந்தால் ஏதேனும் நடந்திருக்கலாம். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் போது, எப்படி பேச முடியும்.
தணிக்கை அலுவலகத்தில் 5 பேர் அமர்ந்து கொண்டு, கோடிக்கணக்கில் மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால், அது தான் விதிமுறை என்பதால் அதன்படி நடக்கிறோம்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.