திருச்சி மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘Main Picture ’ஆக அமைய உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு!!

சென்னை:
“திருச்சி மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘Main Picture ’ஆக அமைய உள்ளது.

அதில் திரளும் கூட்டம் தேர்தலில் திமுக வெற்றிக்கு கட்டியம் கூறுவதாய் அமைந்திட திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் திரளாய் கலந்து கொள்ள வேண்டும்.” என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: மார்ச் 9-ல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும்.

திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’, ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி’, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் – உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் கழகத்தலைவர் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘Main Picture ’ஆக அமைய உள்ளது.

இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட – மாநகர – நகர – ஒன்றிய -பகுதி – பேரூர் – வார்டு – கிளைக் கழக செயலாளர்கள் – நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் மாநில –மாவட்ட – மாநகர – நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் – நிர்வாகிகள் , தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளார்களும் அந்தந்த மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை , வாகன வசதிகள் , செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும் எனவும், வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல ஒரு கழக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதையும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கரை புரண்டு ஓடும் காவிரியாய் – தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம் – ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்.

ஸ்டாலின் தொடரட்டும் , தமிழ்நாடு வெல்லட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *