தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது.
இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.
ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது.
கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.
கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி., மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைகால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது.
மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.
கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது; நாம் பேசிய மூன்று மருத்துவர்களும் குறிப்பிட்டு கூறிய முதல் செய்தி இது; அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம்.
அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும்.
மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம்.
பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு. முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.
ஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.
முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும் எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.
இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும்; தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
நீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும் எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது; அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும்.
அடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும்; சிறிது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும். குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.
கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும் என்பதால் வெளிப்புற உணவுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூற இயலாது எனவே பெரும்பாலும் அதை தவிர்ப்பது நல்லது.