புதுடெல்லி:
நாட்டின் நீளமான காற்றாலை இறக்கையை தயாரிக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
குஜராத்தின் முந்த்ராவில் உள்ள தனது உற்பத்திப் பிரிவில், அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 91.2 மீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான காற்றாலை இறக்கைகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இவை குறைந்த, நடுத்தர காற்று வீசும் இடங்களில் மின் உற்பத்தியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை காற்றாலைகளில் பயன்படுத்தப்படும்.
முந்த்ரா ஆலை தற்போது 78.6 மீட்டர் மற்றும் 80.5 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளை உற்பத்தி செய்து வருகிறது.
புதிய 91.2 மீட்டர் இறக்கையானது வடிவமைப்பு சிக்கல், பொருட்கள் பொறியியல் மற்றும் உற்பத்தித் திறனில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த 91.2 மீட்டர் இறக்கை ஒரு கால் பந்து மைதானத்தின் நீளத்துக்கு இணையானது.
அல்லது 30 மாடி கட்டிடத்தை விட உயரமானது. இது சுமார் 185 மீட்டர் விட்டம் கொண்ட சுழற்சி பரப்பை உருவாக்கும். முந்த்ரா ஆலையின் தற்போதைய உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.25 ஜிகாவாட்ஸ் ஆகும்.
இதை படிப்படியாக 10 ஜிகாவாட்ஸாக ஆக உயர்த்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. காற்றாலை உற்பத்திக்காக இதுவரை ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.