ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும் விரதங்களும்… வழிபாடுகளும்!

விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும். விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜாதக ரீதியாக நமக்கு யோக பலன் தரும் கிரகம் எது என்று அறிந்து, அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்கும் நாளில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடி வரும்.

நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கை சக்கரம் சீராக சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்த கிரகம் பலமிழந்து இருக்கின்றதோ அந்த கிரகத்தை பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள். விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும்.

பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சூரியன் அருள்பெற விரும்புபவர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ஆதிவார விரதம்’ இருப்பது நல்லது. சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுங்கள். கோதுமை தானம் செய்வது நல்லது.

சந்திர பலம் வேண்டுபவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற திங்கட்கிழமை அன்று விரதம் இருப்பது நல்லது. அன்றைய தினம் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானம் செய்யலாம்.

செவ்வாய் என்னும் அங்காரகன் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டு துவரை தானம் செய்வது நல்லது.

புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்விஞானம் பெற விரும்புபவர்கள், புதன்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது. பாசிப்பயிறு தானம் செய்வது நல்லது.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள், வியாழக்கிழமை விரதம் இருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு, சுண்டல் தானம் கொடுப்பது நல்லது.

சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக் கிழமை விரதம் இருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூ மாலை அணி வித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது. மொச்சை தானம் செய்யலாம்.

சனி பகவானின் அருளைப்பெற விரும்புபவர்கள், சனிக்கிழமை அன்று விரதமிருந்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசை மாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும். எள்ளோதரை நைவேத்தியம் அல்லது எள் தானம் செய்யலாம்.

ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

கேது வின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது இருக்கும் இடத்திற்குரிய நாளில் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது. ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு தானம் செய்வது சிறந்தது.

ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற நற்பலன் தரும் கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருப்பதால் குடும்ப முன்னேற்றமும், செல்வச்செழிப்பும், செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த விரதங்கள் உறுதுணையாக அமையும்.

எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்குவது நல்லது. விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *