நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில், ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
எனவே அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. பாஜகவை பொறுத்த அளவில், 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “தமிழகத்தில் சீமான் கூட பாஜக குறித்து பேசுகிறார் என்றும், பாஜக அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது:-
பாஜகவை திட்டினால்தான் ஓட்டு வாங்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் எங்கே பாஜக? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் இப்போது, முதல்வர், அமைச்சர் உயதநிதி, சீமான் கூட பாஜகவைதான் திட்டிக்கொண்ருக்கிறார். இந்த தேர்தலில் 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.
எல்லா தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு எங்களுக்குதான் இருக்கிறது. பாஜக மட்டும்தான் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்து வருகிறது. வேறு யாரும் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதில்லை.
வேறு எந்த கட்சியாவது பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்ட சொல்லுங்கள் பார்ப்போம். ஸ்டாலின் பிரதமராகிறாராமா? உதயநிதி ஸ்டாலின் பிரதமராகிறாராமா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறதா? கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள், அங்கு கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் எதிரெதிராக போட்டியிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.