சென்னை:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ள நிலையில், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதுபோல் மிகைப்படுத்தப்படுவதாக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, உள்துறை செயலர் தீரஜ் குமார், சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களும் பெருமளவு குறைந்துள்ளன.
2021-ல் 1,597 கொலை வழக்குகள் பதிவான நிலையில் 2025-ல் 1,461 ஆக குறைந்துள்ளது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளிலும் குறைந்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளன. ஆனால், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதுபோல் மிகைப்படுத்தப்படுகிறது.
பொது நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களில் கூட அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்துள்ளோம். காவல்துறையைப் பொறுத்தவரை சிறிய குற்றங்களாக இருந்தாலும், பெரிய குற்றங்களாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போக்சோ சட்டம் தொடர்பாக தற்போது பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தானாக முன்வந்து புகார் அளிக்கின்றனர். இதனால், புகார்களின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது.
2021-ம் ஆண்டில் 6,800 போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டில் 11 ஆயிரம் வழக்குகளாக அதிகரித்துள்ளன.
போதைப் பொருள் தடுப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியதாலேயே இந்த வழக்குகள் அதிகரித்துள்ளன.
சிவகங்கையில் நடைபெற்ற ஆகாஷ் காவல் நிலைய மரணம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். காவல் நிலைய மரணங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. அதில், தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது.
நிரந்தர டிஜிபி விவகாரத்தில் தகுதியுள்ள போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் யுபிஎஸ்சி-க்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.