”பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டார் ” – அமெரிக்க எம்.பி. புகழாரம்!!

வாஷிங்டன்:

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

‘பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டார். அவரது ஆட்சியில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் அவா்களுக்கென சவால்கள் உள்ளன. ஒரு நாட்டின் வெற்றி ஒரு தலைவரை மட்டும் பொறுத்ததில்லை. இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை மிகவும் வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது. ராணுவ உளவுப் பகிர்வு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு துறையில் நமது உறவு வலுவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.

அதேசமயம், ரஷியாவுடன் இந்தியா பாதுகாப்பு உறவைத் தொடர்கிறது. இது அமெரிக்கா-இந்தியா உறவில் சவாலாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி நிறுவப்படாத நாடுகளை விட வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளது குறித்து துறை சார்ந்த பலரிடம் நான் கேட்டறிந்துள்ளேன்.

நியாயமான மற்றும் நோ்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, வேறு சில நாடுகள் வழங்காத சலுகைகளை இந்தியா வழங்குகிறது. நமது இருதரப்பு வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

அமெரிக்காவில் தொழில்முனைவோர்கள் நிறைந்த லாஸ் ஏஞ்சல்சில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவா்கள். அமெரிக்காவில் வசிக்கும் மற்றவா்களைவிட அதிக வருமானம் பெறுபவா்களாக விளங்குகின்றனா்.

இவ்வாறு பிராட்செர்மன் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *