சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஒரு கி.மீ தொலைவுக்கு பிரதமர் மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ – பொது மக்கள் கூடி நின்று பூக்கள் தூவி வரவேற்பு!!

புதுச்சேரி:
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஒரு கி.மீ தொலைவுக்கு பிரதமர் மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நேற்று மாலை நடந்தது. கூட்டணிக் கட்சியினர், பொது மக்கள் கூடி நின்று பூக்கள் தூவி வரவேற்றனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, புதுச்சேரி அரசு சார்பில் லாஸ்பேட்டை மைதானத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, ரூ.1,572 கோடி மதிப்பில் 74 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1,142 கோடி மதிப்பில் 19 திட்ட பணிகளைத் தொடங்கியும் வைத்தார்.

இதன்பின் புதுச்சேரி சட்டப்பேரவைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி தலா இரு தொகுதிகள் என 30 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டு, பிரச்சாரமும் உடனடியாகத் தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 30-ம் தேதி ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் உள்ள பாஜக தொண்டர்களோடு பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது, “புதுச்சேரியில் ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு தரப்பு மக்களை பாஜகவினர் சந்தித்து ஓட்டுகளைப் பெற வேண்டும். ஆட்சியின் பயனாளிகளிடம் கருத்துகேட்டு, சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜக சார்பில் புதுச்சேரியில் நடந்த ‘ரோடு ஷோ’வில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச் சேரிக்கு வந்தார்.

புதுச்சேரி விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ரங்கசாமி, தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை வழியாக ‘ரோடு ஷோ’ தொடங்கும் அஜந்தா சந்திப்புக்கு பிரதமர் வந்தார்.

அங்கு 4.30 மணிக்கு ‘ரோடு ஷோ’ தொடங்கியது. ‘ரோடு ஷோ’ வாகனத்தில் பிரதமரின் ஒரு பக்கத்தில் முதல்வர் ரங்கசாமி, மறுபக்கம் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பின்னால் பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

அண்ணா சாலை வழியாக பிரதமர் மோடி கை அசைத்தபடி வாகனத்தில் வந்தார். வழி நெடுகிலும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மலர்களை தூவி, ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷம் எழுப்பியபடி அவரை வரவேற்றனர். 5.10 மணிக்கு நேரு வீதி சந்திப்பில் ‘ரோடு ஷோ’ நிறைவடைந்தது.

சுமார் ஒரு கி.மீ நடந்த இந்த ‘ரோடு ஷோ’வையொட்டி அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதிவரை அண்ணா சாலை விழா கோலம் பூண்டது. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாஜகவினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆங்காங்கே சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அந்த கலைஞர்களுக்கு பிரதமர் வணக்கம் தெரிவித்தார். மத்திய – மாநில நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளும் ஆங்காங்கே பிரதமரை வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

‘ரோடு ஷோ’வின் ஆரம்பம் முதல் முடிவு வரை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாகனத்தைப் பின்தொடர்ந்து நடந்தே வந்தார்.

‘ரோடு ஷோ’ நிறைவடைந்த காமராஜர் சிலை பகுதியில் ‘ரோடு ஷோ’ வாகனம் வந்து நின்றவுடன் முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் கைகுலுக்கி தனது மகிழ்வை வெளிப்படுத் தினார்.

பின்னர் பிரதமர் காரில் புறப்பட்டார். விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து பிரதமர் சென்னை புறப்பட்டு சென்றார்.

பிரதமர் வருகையையொட்டி புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அனைத்து தெருக்களும், கண்காணிப்பு கேமரா வளையத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது.

பிரதமர் செல்லும் வழி முழுவதும் சிறப்பு பாதுகாப்புப் படை, 20 கம்பெனி துணை ராணுவம், உள்ளூர் போலீஸார் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

பிரதமர் வருகையையொட்டி நகரப் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

பள்ளிகள் விடுமுறை என்பதால் மக்கள் நகரப் பகுதிக்கு வராமல் வீடுகளில் முடங்கினர். முக்கிய வர்த்தக வீதியான அண்ணா சாலையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரியில் பல தொகுதியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றனர்.

‘ரோடு ஷோ’ நடந்த பகுதியில் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

ரோடு ஷோவுக்கு மோடி செல்லும் வழியில் இருந்த வெள்ளவாரி வாய்க்காலை துணி கட்டி மறைத்து, அதற்கு முன்பாக வண்ண பேனரால் மறைத்திருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *